மேல்மாகாணசபை உறுப்பினருக்கு பல நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
- Journalist Mujeeb
- Jun 27, 2019
- 1 min read

தொலைத்தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள், வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களுக்கு பல நிபந்தனைகளுடன் பிணைவழங்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்த மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம் இன்றய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 30,000/= ரூபாய் ரொக்கப்பினையிலும் 500,000/= ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் 7ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்லையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது மக்கள் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட, முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்பாடலை இடையூறு செய்யக்கூடிய அதிசக்தி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்கள்(ஜேமர்) மற்றும் வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றுடன் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம் கைது செய்யப்பட்டிருந்தார். பிணையில் விடுதலை செய்யப்பட்டவருக்கு பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது ஷாபி ரஹீம் அவர்களுக்கு பிணை நிற்பவர்கள் நெருங்கிய இரத்த உறவாக இருக்க வேண்டும் என்றும், பிணையில் விடுதலை செய்யப்படுபவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 9மணிக்கும் 12 மணிக்கும் இடையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டுமென்றும் பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய அவர்கள் அறிவித்தார்.
Comentarios